< Back
மாநில செய்திகள்
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
6 Nov 2024 6:30 PM IST

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

41 மாத கால தி.மு.க. ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது.

தமிழ்நாடெங்கும் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனால் தமிழ்நாடெங்கும் காய்ச்சல் முகாம்கள், ரத்தப் பரிசோதனை, வீடு வீடாக சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளனரா மற்றும் மழைநீர் பழைய டயர்கள், பாத்திரம் போன்றவற்றில் தேங்காமல் உள்ளதா என்பதை கண்காணிக்கவும், கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவு மருந்துகளை இருப்பு வைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலினின் தி.மு.க. அரசை பலமுறை வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால் இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இன்று டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், தேவராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுரு – அமுல் தம்பதியினரின் 6 வயது இளைய மகள் யாத்திகா, தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருவதாகவும், கடந்த 3-ம் தேதி காய்ச்சல் அதிகரித்ததால் இச்சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (5.11.2024) இறந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது ஸ்டாலினின் தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை தமிழ்நாடெங்கும் மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்