< Back
மாநில செய்திகள்
பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர் உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர் உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

தினத்தந்தி
|
10 Jan 2025 12:15 PM IST

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த தம்பதி பழனிவேல்-சிவசங்கரி. இவர்களுக்கு லியா லட்சுமி (4 வயது) என்ற குழந்தை இருந்தது. மேலும் 2 மாத ஆண் குழந்தையும் உள்ளது. லியா லட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். குழந்தை லியா லட்சுமி கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று (03.01.2025) பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கழிவுநீர் தொட்டியின் மீது போடப்பட்டிருந்த இரும்பு தகடு துருப்பிடித்து இருந்த நிலையில், மூடி உடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்துள்ளது.

சிறுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததை அறிந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோம்னிக் மேரி மற்றும் வகுப்பாசிரியர் ஏஞ்சல் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பாசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்