பவுர்ணமி வழிபாடு: சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
|பவுர்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரியில் 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி மலை கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. மாதம் தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சதுரகிரி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக வருகிற 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்து உள்ளனர்.
பக்தர்கள் இரவில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. தரிசனம் முடித்தவுடன் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு இறங்கிவிட வேண்டுமென வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.