முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
|முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மரணத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மரணம் அடைந்து விட்டார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
முன்னாள் தலைமைச் செயலாளரும், 1966-ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான பி.சங்கர் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
செய்யாறு உதவி ஆட்சியராக தனது இந்திய ஆட்சிப் பணியைத் தொடங்கிய சங்கர், மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளிலும், மத்திய அரசின் செயலாளர் பதவிகளிலும், மத்திய திட்டக்குழுவின் செயலாளர் பதவியிலும், இறுதியாக மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் தலைவராகவும் திறம்பட நேர்மையுடன் பணியாற்றியவர்.
பி.சங்கரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.