
திருவள்ளூர்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார். இவர் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணை பகுதியில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது, அவ்வழியாக காரில் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டார். இந்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு விளைவிக்கும் நோக்கில் கட்டுப்பாட்டை மீறியதால் விஜயகுமார் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.