நீர்வரத்து சீரானது: கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
|கடந்த 20-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில்கொஞ்சும் வகையில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.
கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாகவே இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 20-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்தும் சீரானது. இதையொட்டி நேற்று முதல் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 8 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று கும்பக்கரை அருவிக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.