குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
|அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால். பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது. வெயிலே இல்லை. பின்னர் மாலையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக இரவு நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்தது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அருவிக்கரை பகுதிகளில் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.