தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
|தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தென்காசி,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்து காணப்படுவதினால் சென்னை உள்ளிட்ட கரையோர மாவட்டங்களில் தற்போது மழையின் அளவு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் சமயத்தில் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும். அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்படும்.
கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நேற்று குற்றால அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை முதல் தொடர் மழைபெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு குளிக்க பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.