வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு
|வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக அகழாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. இதில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், உடைந்த நிலையில் சுடுமண் காதணி மற்றும் சுடுமண்ணால் கலை நயத்துடன் செய்யப்பட்ட மணி ஆகிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறியதாவது:-
இதுவரை சூது பவளம், செவ்வந்திக்கல், ஏராளமான மண்பாண்ட பொருட்கள், செப்பு காசுகள், சுடுமண் முத்திரை, தொங்கட்டான்கள், ஆட்ட காய்கள் உள்பட 2,394 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல் இரண்டு கட்டங்களை விட 3-ம் கட்ட அகழாய்வில் அதிக அளவிலான பொருட்கள் கிடைத்து வருகின்றன. இன்னும் கூடுதலாக அகழாய்வு குழிகள் தோண்டப்பட உள்ளதால் மேலும் அதிக பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.