மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து.. 2 பேர் பலி
|மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840, இரண்டாவது பிரிவில் 600 என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், விபத்து நடந்த பகுதியில் பணிபுரிந்து வந்த இருவர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இருவரும் நிலக்கரி குவியலுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.மேலும், ஒருவர் நிலக்கரி குவியலில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திடீர் விபத்தால் மேட்டூர் அனல் மின் நிலையம் தற்போது பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.