எப்.ஐ.ஆர். வெளியான விவகாரம்: மத்திய அரசு முகமை மீது விசாரணை நடத்த வேண்டும் - சி.பி.ஐ. (எம்) வலியுறுத்தல்
|வழக்கின் விபரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சதி நோக்கம் உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ. (எம்)) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளிவந்த வழக்கில், தேசிய தகவல் மையத்தை வழக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையின் முதல் தகவல் அறிக்கை விபரங்கள், வன்கொடுமைக்குள்ளான பெண் விபரங்களோடு வெளியாகி பரவலான கண்டனம் எழுந்தது. இவ்வாறு குற்றமிழைத்த அதிகாரிகள் உள்ளிட்டு கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சென்னை ஐகோர்ட்டும், பல அமைப்புகளும் இது தொடர்பாக கடுமையாக எதிர்வினையாற்றியது.
இந்த நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளிவந்த குற்றத்திற்கு மத்திய அரசின் தேசிய தகவல் மையமே காரணம் என்று அந்த முகமையின் விளக்கம் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகளும், பெயரும் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் முதல் தகவல் அறிக்கை விபரங்களை மறைக்க முடியாமல் போனதாக தெரிவிக்கின்றன.
அவ்வாறானால், புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை மாதமே அமலுக்கு வந்துவிட்ட நிலையில் அப்போதிருந்து நடைபெற்ற எல்லா வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோர் விபரங்கள் இப்படி கசியவில்லையே, இந்த வழக்கில் மட்டும் விபரங்கள் எப்படி கசிந்தது? என்ற கேள்வி எழுகிறது. எனவே, கடுமையான குற்றத்திற்கு காரணமான மத்திய தகவல் முகமை மீதும் வழக்கு பதிய வேண்டுமென்றும், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விபரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சதி நோக்கம் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டுமென சி.பி.ஐ (எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும், மன உளைச்சலுக்கும், கடும் பாதிப்புக்கும் ஆளாகியுள்ள பெண்ணுக்கு ஐகோர்ட்டின் உத்தரவுபடி நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டுமென்று சி.பி.ஐ (எம்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.