
உயிரிழந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உயிரிழந்த மாணவி பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சொக்கநாதபுரம் கிராமம், கொம்புக்காரன் குட்டை பகுதியைச் சேர்ந்த திரு.கண்ணன் – பரிமளா தம்பதியரின் மகள் செல்வி.கவிபாலா (வயது 12) என்பவர் பட்டுக்கோட்டை வட்டம், ஆண்டிக்காடு சரகம், பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயின்றுவந்த நிலையில் நேற்று (10.02.2025) பள்ளியில் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.