மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
|மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரை கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தாராபுரம்,
தனது மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த நபரைக் கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா தம்மரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 55). நூறுநாள் வேலை திட்ட தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த விவசாயி நடராஜ் (55) என்பவர் மகளை, தங்கராஜ் என்பவருக்கு காதல் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜ் கடந்த 2014-ம் ஆண்டு குமாரசாமியை கடப்பாரையால் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காங்கயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நடராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், நடராஜுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், வாய் தகராறு செய்ததற்கு ரூ.1,000 அபராதமும், கொலை குற்றத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் என மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து நடராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.