மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
|பெற்ற மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 12 வயது மகள் உள்ளனர்.
இந்த நிலையில் அந்த ஊழியர் கடந்த 4 ஆண்டுகளாக தனது மகளான 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அந்த சிறுமி தனக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை குறித்து பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
உடனே ஆசிரியை அந்த சிறுமியின் தாயிடம் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தாராபுரம் அருகே பெற்ற மகளுக்கு நான்கு வருடங்களாக பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.