குடும்ப தகராறில் மனைவி, குழந்தைகள் மீது தீ வைத்த நபர் - 4 வயது மகன் உயிரிழப்பு
|குடும்ப தகராறில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி திருமலைச்செல்வன் - சுகன்யா. இவர்களுக்கு 7 வயதில் ஒமிஷா என்ற பெண் குழந்தையும், 4 வயதில் நிகில் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில், திருமலைச்செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சூழலில், ஒரு மாதத்திற்கு முன்பு சுகன்யா தனது 2 குழந்தைகளுடன் தனது தாயின் வீட்டிற்கு கோபத்துடன் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர் சாயப்பட்டறைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் சுகன்யாவையும், குழந்தைகளையும் பார்ப்பதற்காக திருமலைச் செல்வன் சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதில் ஆத்திரமடைந்த திருமலைச்செல்வன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். அவர்கள் மீது மள மளவென தீப்பற்றி எரிந்த நிலையில், கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 70 சதவீதம் தீக்காயமடைந்த சுகன்யாவின் மகன் நிகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.