
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதளம்: அர்ச்சகர் கைது

திருநள்ளாறு சனீ்ஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் பண மோசடி செய்த அர்ச்சகர், பெங்களூருவை சேர்ந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநள்ளாறு,
உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீ்ஸ்வரர் கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு முன் இணையதளத்தை உருவாக்கி முக்கிய பூஜைகள், தரிசனம் குறித்த விவரங்களை பதிவிட்டு வருகிறது. மேலும் அபிஷேகம், அர்ச்சனை உள்ளிட்டவைகளும் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.
அதேபோல் கோவிலுக்கு வர முடியாத பக்தர்களுக்கும் பூஜை செய்யப்பட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பக்தர்கள் சிலர் கோவில் இணையதளத்தில் பணம் செலுத்தி விட்டதாகவும், பிரசாதம் வரவில்லை என்றும் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காரைக்கால் சைபர் கிரைம் போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் நிர்வாக அலுவலர் அருணகிரிநாதன் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ஆய்வு செய்தபோது கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி பணம் வசூலிப்பது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து கோவில் மேலாளர் சீனிவாசன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். அதில் 'கோவில் அர்ச்சகரான வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூருவை சேர்ந்த ஜனனி பரத் என்பவரும் சேர்ந்து கோவில் நிர்வாகம் பெயரில் போலியாக இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். அவர்கள் பக்தர்களிடம் பணத்தை பெற்று போலியாக பிரசாதம் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் கோவில் நிர்வாகத்தை ஏமாற்றியும், கோவிலுக்கு இழப்பை ஏற்படுத்தியும் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வெங்கடேஸ்வர அர்ச்சகர் மற்றும் பெங்களூருவை சேர்ந்த ஜனனி பரத் ஆகிய 2 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.