< Back
மாநில செய்திகள்
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மாநில செய்திகள்

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
20 Nov 2024 5:02 PM IST

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை பார்வையிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

போலி என்.சி.சி. முகாம் நடந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான 4 பள்ளிகளில், ஏற்கனவெ 2 பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், மீதம் உள்ள 2 பள்ளிகளுக்கும், ஒரு வாரத்திற்குள் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதோடு, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணமாக கிருஷ்ணகிரி மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ரூ.1.6 கோடியை தமிழக அரசு செலுத்தியுள்ளதாகவும், நிவாரணம் கோரி சம்பந்தப்பட்ட மாணவிகள் தரப்பில் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கை பொறுத்தவரை, ஏற்கனவே கோர்ட்டு உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தி வரும் காரணத்தினால் மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்