< Back
மாநில செய்திகள்
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
30 Oct 2024 9:56 PM IST

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்ட விவகாரத்தில், மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், வழக்கு தொடர்பான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. 4 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு பள்ளிகளிலும் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டதா என்று விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராமனின் மரணம் தொடர்பான வழக்கில் சேலம் நீதிமன்ற நீதிபதியின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு பள்ளியில் மட்டும்தான் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்றும், மற்ற 3 பள்ளிகளிலும் விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்