பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீட்டினை வழங்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
|பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டினை உடனடியாக வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட அதிகனமழை காரணமாக விழுப்பாம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்தத்தில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. திண்டிவனத்தில் 37 செ.மீ. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ, திருவண்ணாமலையில் 22 செ.மீ., என வரலாறு காணாத அளவுக்கு மழைப் பொழிவு பல பகுதிகளில் ஏற்பட்டதன் விளைவாக ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர் நிரம்பி, ஊர்களுக்குள் வெள்ளநீர் சென்றதன் காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் தண்ணீ மூழ்கின. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்காததன் காரணமாக பாதிப்பு அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு, இதேபோன்று, திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் செஞ்சி சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலக்கொந்தை ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகவும், விசாத்தனூர் ஏரி உடைந்து கிராமத்திற்குள் புகுந்ததில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இதனையும், தற்போதுள்ள விலைவாசியினையும் கருத்தில் கொண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட அதிகன மழை காரணமாக, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பயிர்கள், வீடுகள், மீன்பிடி படகுகள், வாகனங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. பல பகுதிகளில் கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் கிராமங்களிலேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு அளிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உடுக்க உடை, ரொக்கம் முதலியவற்றை வழங்குவதும், பகுதியாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகள், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு நிவாரண உதவி வழங்குவதும், பயிர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவதும், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதும். உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், அரசின் கடமையாகும்.
இந்த உதவித் தொகையை வழங்கும்போது, மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறையை பின்பற்றாமல், தற்போதுள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 ரூபாய் நிவாரண உதவியும், பகுதியாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு 25,000 ரூபாய் நிவாரண உதவியும், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு 50,000 ரூபாய் நிவாரண உதவியும், தெற் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், இதர நீர்ப்பாசன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாயும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,000 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டினை, நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டுமென்றும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை உடனடியாக சீர்செய்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .