ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
|பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அரசு தேர்வு இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும்.
இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்தவகையில் நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்வெழுத விரும்பும் மாணவர்களின் தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். தொடர்ந்து மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.