புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
|புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு மதியம் 1.05 மணிக்கு வந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கட்சியினரை பார்த்து கையசைத்தபடி சென்றார். கட்சி நிர்வாகிகள் உற்சாக குரல் எழுப்பினர். சால்வை, புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வரவேற்றனர். கட்சி நிர்வாகிகளுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் ரூ.32 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து இந்த டைடல் பூங்காவில் அமைய உள்ள 2 நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிலையில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4,680 மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். மேலும் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் வாகனங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.