ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
|காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலமானார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2 முறை இருந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து செயற்கை சுவாசக்கருவி மற்றும் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
இதையடுத்து மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மனைவி வரலட்சுமிக்கு ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், செங்கோட்டையன், வைகோ, கி.வீரமணி, சைதை துரைசாமி, கே.பாலகிருஷ்ணன், பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இன்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பொதுமக்கள் என பலர் இளங்கோவன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மணப்பாக்கம் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட , ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முகலிவாக்கம் மின் மயானத்தில் வைக்கப்பட்டு மூன்று முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 48 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடத்தப்பட்ட பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.