< Back
மாநில செய்திகள்
இந்தியா மேப்பில் தவறு: தி.மு.க.வின் அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

இந்தியா மேப்பில் தவறு: தி.மு.க.வின் அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
11 Dec 2024 1:20 PM IST

இது தேசிய ஒருமைப்பாட்டை புறக்கணிக்கும் தி.மு.க.வின் செயலை பிரதிபலிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் பெரியார் சமூகநீதி காக்க போராடி வெற்றி பெற்றார். அந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வைக்கத்தில் பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு உள்ளது.

வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்று நூற்றாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் நகரில் உள்ள பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் புதுப்பித்திட ரூ.8 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.அதன்படி புனரமைப்பு பணிகளும், நூலகத்தை விரிவுபடுத்தும் பணிகளும் நடந்து முடிந்துள்ளன. அதில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான அரிய புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சி கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா ஆகியவை சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலையும் இருக்கிறது.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார். இதனிடையே புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தினை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளாவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான காணொளி, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் (TN DIPR) சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், காட்டப்பட்டுள்ள இந்தியா மேப்பில் ஜம்மு-காஷ்மீரின் ஒருபகுதி இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமற்ற ஊடகப் பிரிவான TN DIPR, நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது. நமது நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் எப்போது என்று தெரியாத ஒருவரால் இந்த மாநிலம் வழிநடத்தப்பட்டால், மாநில அரசின் துறைசார்ந்த பணிகளைக் கையாள அவர்களால் அமர்த்தப்பட்ட தகுதியற்ற கைப்பாவைகள் இத்தகைய மெத்தனப் போக்கில் செயல்படுவதில் தான் முடிவடையும்.

இது தேசிய ஒருமைப்பாட்டைப் புறக்கணிக்கும் தி.மு.க.வின் செயலைப் பிரதிபலிக்கிறது. மேலும் தி.மு.க. அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்று மீண்டும் செய்யத் துணியக்கூடாது என்று தமிழ்நாடு பாஜக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்