
கோப்புப்படம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தயார்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தங்களுடைய வாக்குகளை செலுத்தி இயந்திரங்களின் செயல்முறைகளை பரிசோதித்தனர்.
ஈரோடு,
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மறைந்தார். இதனால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.
ஆனால், உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க. உள்பட எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தன. கடந்த 21-ந் தேதி முதல் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், சாமியானா பந்தல், மின் விளக்குகள் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 100 மீட்டர், 200 மீட்டர் தொலைவு கோடுகள் போடப்பட்டு உள்ளன. 200 மீட்டர் தொலைவில் வேட்பாளரின் தேர்தல் 'பூத்' அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொகுதியில் மொத்தம் 9 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் தலா 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
நேற்று காலை 11 மணி அளவில், தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான ஸ்ரீகாந்த், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. 24 மண்டல அலுவலர்கள் தலைமையில், தலா ஒரு உதவி மண்டல அலுவலர், ஒரு உதவியாளர் என பிரித்து, எந்திரங்களை பெற்றனர்.
இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வேட்பாளர்கள் ஏஜெண்டுகள் தங்களுடைய வாக்குகளை செலுத்தி இயந்திரங்களின் செயல்முறைகளை பரிசோதித்தனர். முன்னதாக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் குறைந்தபட்சம் 50 ஓட்டுகளை போட்டு சோதனை நடத்த வேண்டும் என்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைகளில் வைக்கப்பட்டு, அவை பூட்டி சீல் வைக்கப்படுகிறது. பின்னர் வருகிற 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.