ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி
|ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10-ம் தேதி தொடங்குகிறது.
ஈரோடு,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச. 14 ம் தேதி காலமானார். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். பிப். 8 ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 10-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 17-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியும் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து ஜனவரி 10, 13 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும். காலை 11மணி முதல் 3மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கும். 3 பறக்கும் படைகள், 3 நிலைக்குழு, 3 வீடியோ கண்காணிப்பு குழு உள்பட 5 வகையான குழுக்கள் அமைக்கப்படும். 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதற்கு முன்பு முன் தணிக்கை சான்று பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.