ஈரோடு: வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு
|வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் உயிரிழந்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அந்தோணி ஜெரால்ட்(வயது 49). இவர் வழக்கம்போல் நேற்றைய தினம் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
தொடர்ந்து மதிய உணவு அருந்திவிட்டு வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து மற்ற ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவ ஊழியர்கள் பரிசோதனை செய்ததில், அந்தோணி ஜெரால்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.