< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்

தினத்தந்தி
|
16 Oct 2024 5:48 PM IST

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்கள் யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. கடந்த பல மாதங்களாக சில நாட்கள் மட்டுமே துவரம் பருப்பு கிடைக்கிறது. வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதனால் ரேஷனில் ரூ.30-க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர்.

தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3,475 டன் மட்டுமே சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,537 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என்று கூறப்படுகிறது. இது ஏழை நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே திமுக அரசு தனது தூக்கத்தை கலைத்து போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல தீபாவளிக்கு முன்பாக பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைப்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்