விபத்தில் மகன் இறந்த இடத்திற்கு சென்று விஷம் குடித்து என்ஜீனியர் தற்கொலை
|மகன் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு பாலபாக்யாநகர் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயராம் (63 வயது). இவர் நெடுஞ்சாலைத் துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி, மகன்களுடன் வசித்து வந்தார். ஒரு மகன், டவுனில் உள்ள வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகன் விக்னேஷ் ராஜா, கடந்த 2017-ம் ஆண்டு பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலையில் உள்ள 4 வழிச்சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்தார்.
மகன் இறந்த துக்கத்தில் ஜெயராம், அவரது மனைவி ஆகியோர் மனமுடைந்த நிலையில் இருந்தனர். அவர்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றினர். ஆனாலும் ஜெயராமால் மகனின் பிரிவை தாங்கி கொள்ள முடியாமல், மகனின் நினைவிலேயே இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஜெயராம், மகன் விபத்தில் இறந்த ரெட்டியார்பட்டி மலை பகுதிக்கு சென்றார். அங்கு மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.