அமலாக்கத்துறை சோதனை: டெல்லியில் துரைமுருகன்
|அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
சென்னை,
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச் செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடுகளில் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், துரைமுருகனின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உள்ள கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது நாளாக விடிய விடிய அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிறைவடைந்தது. இந்த நிலையில், சென்னையில் இருந்து நேற்று இரவு 10 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். தமிழக அரசுமுறைப் பயணமாக துரைமுருகன் தில்லிக்கு சென்றுள்ளாரா? அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றுள்ளாரா? என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
வேலூரில் உள்ள தனது மகன் கதிர் ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் துரைமுருகனின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.