அமலாக்கத்துறை சோதனைக்கும் டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அமைச்சர் துரைமுருகன்
|இலாகா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தான் டெல்லி சென்றேன் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர்ஆனந்த் எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை 2 நாட்கள் நடைபெற்றது. இந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுதி கொடுத்துவிட்டு சென்றதாக அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனும் சென்றார். டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் தமிழக அரசின் விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் அவர், ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆகியோரை சந்தித்து சட்ட ஆலோசனை பெற்றதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்டு சென்னை திரும்பினார். அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தவுடன், அமைச்சர் துரைமுருகனின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் யூகங்களை கிளப்பியது. இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கும், டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், "இலாகா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தான் டெல்லி சென்றிருந்தேன். அமலாக்கத்துறை சோதனை பழகிப்போனதுதான். நீங்கள் எழுதியிருக்கும் கதைக்கெல்லாம் நான் ஆள் இல்லை. அமலாக்கத்துறை சோதனைக்கும், டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.