'ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்' - நெல்லையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
|நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
நெல்லை,
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென்தமிழக மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் குளங்கள் நிரம்பி, குளத்தின் கரைகள் உடைந்து வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. குறிப்பாக நெல்லை மாநகர் பகுதிகள், சந்திப்பு பேருந்து நிலையம், முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் கே.என்.நேரு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"ஆக்கிரமிப்பு கட்டிடங்களால்தான் மழைநீர் போகவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லியிருக்கிறோம். இதுபோன்ற நேரங்களில் ஆக்கிரமிப்புகளை எடுத்தால்தான் எடுக்க முடியும். பேருந்து நிலையத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும்.
சுமார் 3 இடங்களுக்கு மேல் நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடற்கரையோரங்களில் மழை இல்லை. முக்கூடலில் மட்டும்தான் கொஞ்சம் பாதிப்பு இருக்கிறது. சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. நெல்லையில் இது இரண்டாவது வருடமாக நமக்கு அனுபவம் கிடைத்துள்ளது. இனி அனைத்து கால்வாய்களையும் தூர்வாருவதற்கு ஏற்பாடு செய்வோம். எத்தனை புயல் எச்சரிக்கைகள் வந்தாலும் அவற்றை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்."
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.