
நீலகிரி
விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு

விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்தார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் இன்கோ நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் (வயது65) மற்றும் காந்திமதி (60). சம்பவத்தன்று காந்திமதி, கணேசன் ஆகியோர் பந்தலூரில் தனியார் தேயிலை தோட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த காட்டு யானை 2 பேரையும் தாக்கியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தேவாலா வனத்துறையினர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர்மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து அங்கிருந்து கணேசன் கோவை அரசுஆஸ்பத்திரியிலும், காந்திமதி, சுல்த்தான்பத்தேரி தனியார் ஆஸ்பத்திரியிலும் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கணேசன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) துரைபாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.