< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
18 Nov 2024 10:42 AM IST

மக்கள்தொகை காரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை அதிகரிக்க 16-வது நிதிக் குழுவிடம் அரசு முறையிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பகிர்வினை நிதிக் குழு மேற்கொண்டு வருகிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத முதல் நிதிக் குழுக் காலத்தில், வருமான வரி மூலமாக 15.25 சதவீதம் வரிப் பகிர்வும், மத்திய கலால் வரி மூலமாக 16.44 சதவீதம் வரிப் பகிர்வும் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, இரண்டாவது நிதிக் குழுக் காலத்தில் வருமான வரி மூலமாக 8.40 சதவீதம் வரிப் பகிர்வும், மத்திய கலால் வரி மூலமாக 7.56 சதவீதம் வரிப் பகிர்வும் கிடைத்தது. கிட்டத்தட்ட இதே அளவுக்கு தொடர்ந்து வந்த நிதிப் பகிர்வு, பத்தாவது நிதிக் குழுக் காலத்தில் 6.637 சதவீதமாகவும், பதினோறாவது நிதிக் குழுக் காலத்தில் 5.385 சதவீதமாகவும், பன்னிரெண்டாவது நிதிக் குழுக் காலத்தில் 5.305 சதவீதமாகவும், பதின்மூன்றாவது நிதிக் குழுக் காலத்தில் 4.969 சதவீதமாகவும், பதினான்காவது நிதிக் குழுக் காலத்தில் 4.023 சதவீதமாகவும், பதினைந்தாவது நிதிக் குழுக் காலத்தில் 4.189 சதவீதமாகவும், தற்போது 4.079 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு குறைந்து கொண்டே வருவதற்கான முக்கியக் காரணங்கள் என்ன என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். முதல் ஏழு நிதிக் குழு வரை, மக்கள் தொகை என்ற காரணிக்கு (Criteria) 80 முதல் 90 சதவீதம் வரை முக்கியத்துவம் (Weightage) கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய வரிப் பகிர்வு கிடைத்து வந்தது.

எட்டாவது நிதிக் குழுவிலிருந்து மக்கள் தொகைக்கான முக்கியத்துவம் (Weightage) வெகுவாக குறைக்கப்பட்டு, distance அல்லது income distance அல்லது fiscal capacity distance காரணிக்கு (Criteria) அதிக முக்கியத்துவம் (Weightage) தரப்பட்டது. அதாவது எட்டாவது நிதிக் குழுவில் 50 சதவீதமும், ஒன்பதாவது நிதிக் குழுவில் 50 மற்றும் 45 சதவீதமும், பத்தாவது நிதிக் குழுவில் 60 சதவீதமும், பதினோறாவது நிதிக் குழுவில் 62.5 சதவீதமும், பன்னிரண்டாவது நிதிக் குழுவில் 50 சதவீதமும், பதின்மூன்றாவது நிதிக் குழுவில் 47.5 சதவீதமும், பதினான்காவது நிதிக் குழுவில் 50 சதவீதமும், பதினைந்தாவது நிதிக் குழுவில் 45 சதவீதமும் முக்கியத்துவம் (Weightage) அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் காரணியின் (Criteria) மூலம், தனி நபர் வருமானம் (Per Capita Income) குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக வரிப் பகிர்வும், தனி நபர் வருமானம் (Per Capita income) அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு குறைவான வரிப் பகிர்வும் கிடைக்கும். தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (Per Capita Income) அதிகமாக இருப்பதன் காரணமாகவும், கிட்டத்தட்ட 50 சதவீதம் முக்கியத்துவம் இந்தக் காரணிக்கு கொடுக்கப்படுவதன் காரணமாகவும், தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய வரிப் பகிர்வு மிகவும் குறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு குறைந்து கொண்டே வருவதற்கு இது ஒரு முக்கியக் காரணியாக விளங்குகிறது. இந்தக் காரணி மூலம் பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அதிக பயன் பெறுகின்றன. இந்த காரணிக்கான முக்கியத்துவத்தை (Weightage) கணிசமாக குறைத்து, அதனை வரி வசூல் திறன் (Tax Efficiency), மத்திய அரசின் வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு (Contribution to Union Taxes) மற்றும் மனித வளக் குறியீடுகள் (படிப்பறிவு - Literacy, குழந்தை இறப்பு விகிதம் - Infant Mortality Rate, தாய் இறப்பு விகிதம் - Maternal Mortality Rate, மருத்துவமனை பிரசவங்கள் Institutional Deliveries, மொத்த கருவள விகிதம் Total Fertility Rate) போன்ற காரணிகளுக்கு அளித்தால் வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு நியாயமான வரிப் பகிர்வு கிடைக்கும். எனவே, இதனை பதினாறாவது நிதிக் குழுவிடம் தி.மு.க. அரசு வலியுறுத்த வேண்டும்.

இரண்டாவதாக, மக்கள் தொகை காரணிக்கான முக்கியத்துவம் (Weightage) குறைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பதின்மூன்றாவது நிதிக் குழுக் காலம் வரை 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், பதினான்காவது நிதிக் குழுக் காலத்தில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகையுடன், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பதினைந்தாவது நிதிக் குழுக் காலத்தில் 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை முழுவதுமாக கைவிடப்பட்டு 2011-ம் ஆண்டு மக்கள்தொகை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு என்பது ஒரு சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு கிடைத்த பரிசு! இந்த நடவடிக்கை, சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தண்டிப்பதுபோல் உள்ளது. எனவே, மீண்டும் 1971 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், மக்கள்தொகை காரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை (Weightage) அதிகரிக்க வேண்டுமென்றும் பதினாறாவது நிதிக் குழுவிடம் தி.மு.க. அரசு முறையிட வேண்டும்.

கடைசியாக, 2000-ம் ஆண்டு அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலமாக அனைத்து வரிகளும் வரிப் பகிர்விற்குள் எடுத்துக் கொண்டு வரப்பட்ட நிலையில், Cess and Surcharge-க்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனை வரிப் பகிர்வுக்குள் கொண்டு வந்தால், அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் வரிப் பகிர்வு கிடைக்கும். இதனையும், பதினாறாவது நிதிக் குழுவிடம் தி.மு.க. அரசு வலியுறுத்த வேண்டும். முதல்-அமைச்சர் நிதித் துறை அதிகாரிகளுடனும், நிதி வல்லுநர்களுடனும் கலந்து ஆலோசித்து, தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வை அதிகமாக பெறுவதற்கான வழிமுறைகளை பதினாறாவது நிதிக் குழுவிடம் எடுத்துரைத்து, 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்