< Back
மாநில செய்திகள்
ஒரே பொய்யை அரைக்கிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
மாநில செய்திகள்

ஒரே பொய்யை அரைக்கிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

தினத்தந்தி
|
2 Jan 2025 8:24 PM IST

எடப்பாடி பழனிசாமி மட்டமான அரசியலை செய்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

சென்னை,

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கபட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டதை மக்கள் அறிவர். மேலும் இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சிகள் பரப்பிய பொய்யை எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கி ஆதாரத்தோடு பலமுறை எடுத்துக் கூறியாயிற்று, சென்னை ஐகோர்ட்டிலும் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனாலும் தினமும் விடிந்து எழுந்தவுடன் தனது அரசியல் ஆதாயத்திற்காக, அரைத்து அரைத்து புளித்த அதே பொய்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று ஐகோர்ட்டே எதிர்கட்சிகளின் செயலை தாங்கமுடியாமல் அவர்கள் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது.. 'எதிர்க்கட்சிகள் வெறும் விளம்பர நோக்கில் இந்த விவகாரத்தை அணுகுவதாக கூறி'கடுமையாக கண்டித்துள்ளது. இதைத்தான் ஆரம்பம் முதலே நாங்கள் கூறி வருகிறோம். இன்று அதை ஐகோர்ட்டே உறுதிப்படுத்தி உள்ளது. ஆனாலும் எடப்பாடிக்கு ஒரே பொய்யை திரும்பத் திரும்ப பேச எந்த கூச்சமும் இருப்பது இல்லை.

அடிமை அதிமுக என்ற கட்சி இனி எடப்பாடி கையில் இருக்குமோ. . . இருக்காதோ. . . என்ற வகையில், காற்றில் கிழிந்து காணாமல் போக காத்திருக்கும் சின்னம் தொடர்பான வழக்கு நடந்து வருவதால் அதைத் திசை திருப்ப சென்னை ஐகோர்ட்டே கண்டித்த பின்னும் அரசியல் சுயநலத்திற்காக பாதிக்கபட்ட மாணவியின் எதிர்காலத்தை பற்றி கொஞ்சமும் கவலையின்றி நடந்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி.

தனது கட்டுப்பாட்டில் இருந்து அதிமுக கைநழுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை வைத்து தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க துடிக்கும் மட்டமான அரசியலை செய்து வருகிறார். தனது ஆட்சிக் காலத்தில் குற்றவாளிகளுக்கெல்லாம் கட்சியிலேயே அடைக்கலம் கொடுத்து அவர்களைக் காப்பாற்ற புகார் அளித்த பெண்களையே மிரட்டும் கொடுமைகளை எல்லாம் அரங்கேற்றிய எடப்பாடி பழனிசாமி இன்னும் அந்த மனநிலையை விட்டு வெளிவரவே இல்லை. இன்றும் அப்படி தொடரும் என எண்ணி ஏமாற வேண்டாம் எடப்பாடி பழனிசாமி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்க்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் மின்னல் வேகத்தில் செயலாற்றி வருகிறது. திராவிட மாடல் அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் பெண்கள் நலனில் தனி அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

பெண்கள் முன்னேற்றத் திட்டங்களை வகுத்து செயலப்படுத்துவது மட்டுமல்லாமல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு பிரிவுகளை உருவாக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் இன்று இந்தியாவிலேயே பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.

என்.சி.ஆர்.பி தேசிய குற்ற ஆவண காப்பகம் இறுதியாக வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் மிக மிக குறைவாகவே உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது. அதில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் இலட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனிலும் பாதுகாப்பிலும் எந்த சமரசமுமின்றி சிறப்பாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது . பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராய் வீண் வதந்தி பரப்பி அச்சுறுத்த நினைக்கும் பொய்ச்சாமிகளை மக்களே புறந்தள்ளுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்