< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமி ஏதோ நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் - அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி ஏதோ நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் - அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தினத்தந்தி
|
26 March 2025 6:07 PM IST

எடப்பாடி பழனிசாமி என்ன நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அமித்ஷாவை சந்தித்து பேசினார் எனத் தெரியவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், டெல்லியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிடுவதற்காகத்தான் வந்துள்ளேன். யாரையும் சந்திக்கவில்லை என டெல்லியில் இருந்தபோது தெரிவித்தார். ஆனால் நேற்று இரவு அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஏதோ நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து பேசிய அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க. கட்டிடத்தை பார்வையிட செல்வதாக கூறினர். ஆனால் அமித்ஷாவை சந்தித்துள்ளனர். இவ்வளவு ஒளிவு மறைவாக உள்துறை மந்திரியை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? பகிரங்கமாக சந்திக்கலாமே. நேற்று கட்டிடத்தை திறந்து வைக்க வந்துள்ளேன் என்றார். இன்று தேர்தலை பற்றி பேசவில்லை. தமிழ்நாடு பிரச்சினை பற்றி பேசினோம் எனச் சொல்கிறார்.

நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கல்யாண தேதி என்று எந்த தேதியை தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவுதான்... பா.ஜ.க. உடன் கூட்டணி கிடையாது, ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது எனக் கூறியவர்கள் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். என்ன பேசியிருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாடு பிரச்சினை என்றால் சந்திக்க அனுமதி வழங்கியிருக்கமாட்டார்கள். அப்படி வழங்கினாலும் கோரிக்கை மனுவை பெற்று 3 நிமிடத்தில் அனுப்பியிருப்பாரக்ள்.

அரசியல் உறவே கிடையாது என சத்தியம் பேசிய எடப்பாடி பழனிசாமி, என்ன நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சந்தித்து பேசினார் எனத் தெரியவில்லை. என்ன நெருக்கடி என்று தெரியவில்லை. ஏதோ ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டு அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். மெல்ல மெல்ல மற்ற செய்திகள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்