
ஈ.சி.ஆர். விவகாரம்: கைதான முக்கிய குற்றவாளி அ.தி.மு.க.வை சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி

பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண்கள் சென்ற காரை இரு கார்கள் மறிக்கும் காட்சியும், அதில் இருந்து பெண்களின் காரை நோக்கி வேகமாக ஒரு இளைஞர் ஓடி வரும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்து அப்பெண்கள் அலறும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதனிடையே கைது செய்யப்பட்டவர்களின் கார்களில் தி.மு..க கொடி இருந்ததால் இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஈ.சி.ஆர். சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்தான் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஈ.சி.ஆர். சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருகிறது.
ஈ.சி.ஆர். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு கார் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரின் சகோதரன் மகனுக்கு சொந்தமானது. அ.தி.மு.க. செய்த ஒவ்வொரு குற்றத்தையும் தி.மு.க. மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறது. புலன் விசாரணையை விரைவில் முடித்து இந்த இரண்டு கார்களும் எந்த அ.தி.மு.க.வை சேர்ந்தவருடையது என்பது குறித்தும், அவருக்கு என்ன தொடர்பு என்பது குறித்தும் விரைவில் விசாரித்து அறிவிக்கப்படும்.
பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அ.தி.மு.க.வினர் செய்யும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தி.மு.க. மீது எடப்பாடி பழனிசாமி போட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்று இருக்கிறது என்றால், குற்றம் புரிந்தவர்கள் எல்லாம் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்தான்" என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.