'காவல் உதவி' செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்: பெண்களுக்கு அமைச்சர் அறிவுரை
|மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டுமென கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
'காவல் உதவி' செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு பெண்களுக்கு அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது;
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் 'காவல் உதவி' செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவசர காலங்களில் 'சிவப்பு நிற அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் (Google Play Store, App Store) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.