'சிரமத்தை பார்க்காதீர்கள்; மழை பெய்தால்தான் மக்களுக்கு நல்லது' - அமைச்சர் கே.என்.நேரு
|மழை பெய்து ஏரிகள் நிரம்பினால்தான் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை,
வங்கக்கடலில் நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் - தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளதாகவும், இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், இன்றைய தினம் சென்னையில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மழை பெய்து ஏரிகள் நிரம்பினால்தான் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "என்னை பொறுத்தவரை மழை கொஞ்சம் பெய்ய வேண்டும். மழை பெய்து ஏரிகள் நிரம்பினால்தான் குடிநீர் தேவை பூர்த்தியாகும். இரண்டு நாள் சிரமத்தை பார்க்காதீர்கள். தமிழகம் முழுவதும் மழை பெய்தால்தான் மக்களுக்கு நல்லது" என்று தெரிவித்தார்.