< Back
மாநில செய்திகள்
துணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
மாநில செய்திகள்

துணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
13 Nov 2024 2:11 PM IST

டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த டாக்டர் பாலாஜிக்கு கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, டாக்டரை கத்தியால் குத்தியுள்ளார்.

தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 6 மாதங்களாக இந்த மருத்துவமனையில்தான் விக்னேஷ் என்பவர் தனது தாய்க்கு புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றிய நிலையிலேயே தனது தாயை விக்னேஷ் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது விக்னேஷிடம் "நோயாளியின் நோயை முழுவதுமாக போக்கி உயிரை காப்பாற்ற முடியாது, ஆனால் அவரது வாழ்நாளை கீமோதெரபி சிகிச்சையால் ஓரளவுக்கு அதிகரிக்கலாம் என பாலாஜி கூறியிருந்தார். அவரது ஒப்புதலின்பேரில்தான் கீமோதெரபி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது தாயை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது அங்கிருந்த டாக்டர் என்ன சொன்னார் என தெரியவில்லை, இவர் என்ன புரிந்து கொண்டார் என்றும் தெரியவில்லை. இன்று காலை ஓபி சீட்டுடன் டாக்டர் பாலாஜியின் அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு டாக்டரை கத்தியால் குத்திவிட்டார். டாக்டரை குத்திவிட்டு வெளியே வந்த விக்னேசை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் கூறுகையில், டாக்டருக்கு உடனே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. டாக்டர் இதய நோயாளி, அவருக்கு பேஸ்மேக்கர் வைக்கப்பட்டுள்ளது. ரத்தம் உறையாமல் இருப்பதற்காக மருந்து சாப்பிட்டு வருகிறார். இதனால் கத்தியால் குத்தியதும் ஏராளமான ரத்தம் வெளியேறிவிட்டது. அதாவது கத்திக் குத்தை விட இந்த ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது. தற்போது டாக்டர் மயக்கத்தில் இருக்கிறார். அவர் கண் விழித்ததும்தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும்" என்று அவர் கூறியிருந்தார். இதனிடையே விக்னேஷ் காய்கறி வெட்டும் கத்தியை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அரசு டாக்டரின் உடல்நிலையை கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "டாக்டரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. டாக்டர் பாலாஜியின் தலைப் பகுதியில் 4 இடங்களில் காயம் உள்ளது. உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

இந்த சூழலில் கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கார் முன்பு டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர் மீதான தாக்குதலை கண்டித்தும், பணிப் பாதுகாப்பு கேட்டும் துணை முதல்-அமைச்சரின் கார் முன்பாக அமர்ந்து அரசு டாக்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுடன் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே மருத்துவ சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளநிலையில் பிற்பகலில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்