கிண்டி மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து
|கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிண்டி,
சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, டாக்டர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் உள்பட 4 பேர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் பாலாஜி படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.