7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
|தான் செல்லும் இடங்களில், மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சி குறித்து விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய வரலாறு தி.மு.க.வுக்கு தான் உண்டு. நிச்சயமாக கூறுகிறேன். 7வது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக தி.மு.க. அமையும். அதன் அடித்தளமாக அமைந்த இந்த ஆட்சி விடியல் ஆட்சியாக அமையும் என கூறினோம்.
நான் செல்லும் இடங்களில், மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி. மகளிர் விடியல் பயணம் மேற்கொள்வோர் 'ஸ்டாலின் பஸ்' என்று அழைப்பதுதான் விடியல் ஆட்சி.
மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், முழு உழைப்பை தந்து ஆட்சி நடத்தி வருகிறோம். அடுத்து அமையப்போகும் அரசும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அதில், எங்களுக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கும் சந்தேகமில்லை.
போராட்டம் நடத்துவது தவறல்ல. அனுமதிக்கப்பட்ட இடத்தில் அனுமதியோடு போராட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது
தமிழ்நாட்டை மேம்படுத்தும் தொண்டை , மேல்போட்டுக்கொண்டு, அதே பணியாக இருப்பவன் நான். இதைத் தவிர எனக்கு வேறு பணிகள் இல்லை. என்னுடைய சிந்தனையும் செயலும் தமிழ்நாடுதான்... தமிழையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் சுற்றிச்சுற்றி வருகிறது.
புதுமைப்பெண், மகளிர் விடியல் பயணம் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அன்போடு என்னை 'அப்பா... அப்பா' என வாய்நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். மாதம்தோறும் 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தி உள்ளோம். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பச்சிளம் குழந்தைகளின் தாய்க்கு ஊட்டச்சத்து பெட்டகம். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். காலை உணவு திட்டத்தால் தெம்பாக படிப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். இவைதான் விடியலின் சாட்சி.
அனைத்து திட்டங்களையும் குறிப்பிட்டால் எதிர்க்கட்சியினர் அதிகம் வேதனை அடைவர். திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது. திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே சிலர் பயப்படுகின்றனர். அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியே திராவிட மாடல். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு 5.4 சதவீதம் ஆக உள்ளது.
மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள் விடியல் எங்கே என கேட்கின்றனர்? விடியல் மக்களுக்காகத்தான், மக்களுக்கு எதிரானவர்களுக்கு இல்லை. மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியின் அடையாளம்தான் விடியலின் ஆதாரம். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவையே விடியல் ஆட்சியின் சாட்சி" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.