திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது: மு.க.ஸ்டாலின் உறுதி
|மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை.
2 நாள் பயணமாக கோவை வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் சுகுணா கல்யாண மண்டபத்தில் நில எடுப்பு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து,கோவை தெம்பட்டி காலனி பகுதியில் தங்க நகை தயாரிக்கும் பொற்கொல்லர்களின் பட்டறையில் கொல்லர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மக்கள் பல கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். அவை நிறைவேற்றித் தரப்படும். தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை பரிசீலிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான். மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.
முன்னதாக, எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை என்று கோவையில் கட்சி நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.