கவர்னரை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
|திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார் . மேலும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. அதன்படி திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.