< Back
மாநில செய்திகள்
தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலான அறிவிப்புகள் காகித வடிவிலேயே உள்ளன - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலான அறிவிப்புகள் காகித வடிவிலேயே உள்ளன - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
8 Nov 2024 6:58 PM IST

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு புதிய எச்.டி. செட் டாப் பாக்ஸ்களை விரைந்து வாங்கி வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மாபெரும் மக்கள் திட்டங்களான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் இரு சக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம், அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் என பலத் திட்டங்களை முடக்கிய தி.மு.க. அரசு, அடுத்ததாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மூடுவிழா நிலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

தி.மு.க. குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டவுடன், 400 கோடி ரூபாய் அரசு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனத்தை அப்போதைய தி.மு.க. அரசு நீர்த்துப் போகச் செய்தது. பின்னர் ஜெயலலிதா வர்கள் 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், செயலற்று கிடந்த தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை சீரமைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை மாதம் ரூபாய் 70 கட்டணத்தில் மக்கள் கண்டுகளிக்க வழிவகை செய்தார். இந்த நிறுவனத்திற்கான டிஜிட்டல் உரிமையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. இதற்கான செட் டாப் பாக்ஸ்களும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டன.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட செட் டாப் பாக்ஸ்களை எச்.டி. செட் டாப் பாக்ஸ்களாக மாற்றி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இந்த புதிய செட் ஆப் பாக்ஸ்களுக்கான அறிவிப்பு ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், ஆனால் இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்றும், பழுதான பழைய செட் ஆப் பாக்ஸ்களை சரி செய்யக்கூட சேவை மையங்கள் இல்லை என்றும், இதன் காரணமாக ஆப்பரேட்டர்கள் செட் ஆப் பாக்ஸினை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு தனியாருக்கு மாறி வருவதாகவும் அரசு கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பேருந்துகள் வாங்கப்படும் என்று ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துவிட்டு, அதற்கேற்ப பேருந்துகளை வாங்காததுபோல, புதிய எச்.டி. செட் ஆப் பாக்ஸ்கள் வாங்கப்படும் என்று தெரிவித்துவிட்டு, அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தி.மு.க. அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஒரு வேளை அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுக்காததுதான் "திராவிட மாடல்" போலும்! கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலான அறிவிப்புகள் இதுபோன்று காகித வடிவிலேயே உள்ளன.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், சட்டமன்ற அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வண்ணமும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மீட்டெடுக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு புதிய எச்.டி. செட் டாப் பாக்ஸ்களை விரைந்து வாங்கி வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்