
தி.மு.க. உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி. சந்திரகுமார் சட்டசபை உறுப்பினராக சென்னை தலைமை செயலகத்தில் இன்று பதவியேற்று கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ந்தேதி நடந்தது. இதில், ஆளும் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1,14,439 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.
இதனால், 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி. சந்திரகுமார் சட்டசபை உறுப்பினராக சென்னை தலைமை செயலகத்தில் இன்று பதவியேற்று கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டணி கட்சிகளை சேர்ந்த செல்வப்பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதேபோன்று வைகோ, முத்தரசன், சண்முகம், கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.