< Back
மாநில செய்திகள்
அஜித் கிடைக்க மாட்டாரா என திமுக முயற்சி செய்து வருகிறது: எச்.ராஜா
மாநில செய்திகள்

அஜித் கிடைக்க மாட்டாரா என திமுக முயற்சி செய்து வருகிறது: எச்.ராஜா

தினத்தந்தி
|
4 Nov 2024 5:24 PM IST

விஜய் எப்படி பாஜகவின் பி டீம் ஆவார்? என்று எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

சென்னையில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பாசிசம் எனும் வார்த்தையை அனைவரும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அர்த்தம் தெரியுமா?. ஒருவருடைய கொள்கையை, அடுத்தவர்களின் விருப்பத்திற்கு எதிராக திணிப்பதே பாசிசம். அப்படி பார்க்க போனால் திக மற்றும் கம்யூனிஸ்ட் ஆகியோர்தான் பாசிசம். ஆனால் இவர்கள் மத்திய அரசை பாசிசம் என விமர்சனம் செய்கிறார்கள்.

விஜய் கட்சியின் தீர்மானங்களை பார்க்கும்போது, திமுகவில் அவர் சேர்ந்து கொள்ளலாம் என சொல்ல தோன்றுகிறது. திமுக கொள்கைகள் போல நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்கிறார். திமுக கொள்கையையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் சீமான் பாஜகவின் பி டீம் என்று சொன்னார்கள், இப்போது விஜய்யை பி டீம் என்று சொல்கிறார்கள். ஒரு கட்சிக்கு எத்தனை பி டீம்?; அது தாங்காது. அவர் தான் எங்களை ஒன்றிய அரசு என கூறுகிறார் அல்லவா?. விஜய் எப்படி பாஜகவின் பி டீம் ஆவார்?.

அஜித்குமார் அவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த விவகாரத்தில், உண்மையில் திமுகவின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?. தண்ணீருக்குள் விழுந்து இறந்த ஒருவரின் நிலைதான். அதுபோலதான் அஜித் குமார் கிடைக்க மாட்டாரா என திமுக முயற்சி செய்து வருகிறார்கள். இதை பற்றி கேட்க வேண்டியது; கவலைப்பட வேண்டியது அஜித்குமார் தான். நாம் கேட்க ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்