< Back
மாநில செய்திகள்
சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
18 Dec 2024 9:25 PM IST

மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து பாதுகாப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், சிறுபான்மைச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்து பாசத்தோடு செய்வோம். அதனால்தான், வரலாற்றுப் பக்கங்களில் திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாவலனாக போற்றப்படுகிறது.

சிறுபான்மையின சகோதர, சகோதரிகளின் அரணாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. சிறுபான்மை மக்களின் உரிமை, வாழ்வாதாரத்தை காப்பதில், தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது. மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து பாதுகாப்போம்.

பெரும்பான்மையை பார்த்து பயப்பட தேவையில்லாத சூழலில் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவது தான் மதச்சார்பின்மை கொள்கையின் மகத்துவம். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான். இருந்தாலும் இந்திய அளவில் தற்போது நிலவக்கூடிய சூழல் நம்மை கவலைப்பட வைப்பதாக உள்ளது. அத்தகைய சூழலை எதிர்கொள்ள சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை கொள்கையை திராவிட மாடல் அரசு எந்நாளும், எந்த நிலையிலும் பாதுகாக்கும். சிறுபான்மையினருக்கு திமுக என்றென்றும் அரணாக திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்