
சென்னை
"இஸ்லாமியர்களை காக்கும் அரணாக தி.மு.க உள்ளது.." முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியல் ரீதியான அச்சுறுத்தல் வரும்போது இஸ்லாமியர்களை காக்கும் அரணாக தி.மு.க. செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (திங்கள் கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் வர் மு.க.ஸ்டாலின், "திருவாரூரில் நடைபெற்ற மிலாடி நபி விழாவில் தான் அண்ணாவும், கலைஞரும் முதலில் சந்தித்தனர். அண்ணாவையும், கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான். சிறுபான்மையினர் நல வாரியத்தை தொடங்கியவர் முத்தமிழஞர் கலைஞர். காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு கலைஞர் வழங்கினார். கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது மிலாடி நபிக்கு விடுமுறை அறிவித்தார். ஆனால், அதை அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது. கலைஞர் மீண்டும் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று மிலாடி நபிக்கு மீண்டும் விடுமுறை அறிவித்தார்.
உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கினார். வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க மானியம் வழங்கினார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தை தொடங்கினார். உருது அகாடமி தொடங்கினார். இப்படி இஸ்லாமியர்களுக்கு பல முன்னெடுப்புகளை எடுத்தார். அவர் இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று நினைத்ததில்லை. அதற்கு நன்றி சொல்லி தன்னை இஸ்லாமியர்களிடமிருந்து பிரித்துவிடாதீர்கள் என்று கூறினார். அவரின் வழித்தடத்தில்தான் இன்றைக்கு தி.மு.க. ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
சிறுபான்மையினர்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறோம். தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் ரூ.80 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஹஜ் பயனர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது. 11,364 ஹஜ் பயணிகள் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக 24 கோடியே 54 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல திட்டங்களை நான்கு ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்துள்ளது.
அரசியல் ரீதியான அச்சுறுத்தல் வரும்போது இஸ்லாமியர்களை காக்கும் அரணாக திமுக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் வருந்ததக்க சூழல் இருந்தாலும், நம் தமிழ்நாட்டில் மத ரீதியான வன்முறை நடக்காமல் தி.மு.க. அரசு காத்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டப்போது, அதற்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி 1 கோடி கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்தது. அவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறியிருக்காது. தி.மு.க.-வும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்தோம். மக்கள் மன்றத்திலும் போராடினோம்.
அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்த சட்டத்தால் ஒரு இஸ்லாமியர்களும் பாதிப்பு ஏற்படாது என்றார். இதை சிறுபான்மை இன மக்கள் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள். இப்போது எந்த கூச்சமும் இல்லாமல் இஸ்லாமிய விழாக்களில் பங்கேற்கிறார். பொது சிவில் சட்டத்திற்கு எதிராக மத்திய சட்ட ஆணயத்துக்கு கடிதம் அனுப்பியது தி.மு.க.தான்.
இப்போது கூட வக்பு வாரிய மசோதா இந்திய அளவில் பேசு பொருளாக உள்ளது. சிறுபான்மையின மக்கள் உரிமையை பறிக்கும் வகையில் பா.ஜ.க. இதை கொண்டு வருகிறது. அதை தி.மு.க.-வும் அதன் கூட்டணி கட்சியினரும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றனர். ஒருவேளை அது சட்டமானால் அதை ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம்.
பா.ஜ.க. சதி திட்டம் நிறைவேற தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக போராடுவோம்.. உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம். இஸ்லாமிய உரிமைகளை காப்பாற்ற நாங்கள் செயல்படுவோம். இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக போராடும், வாதாடும் நாங்கள்தான் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதி படைத்தவர்கள். அந்த தகுதியோடு, சகோதர அன்போடு இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம் பங்கேற்கிறோம்" என்று கூறினார்.