< Back
மாநில செய்திகள்
டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் பொய்கள் வெட்ட வெளிச்சம்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

File image

மாநில செய்திகள்

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் பொய்கள் வெட்ட வெளிச்சம்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

தினத்தந்தி
|
25 Dec 2024 11:49 AM IST

10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், விடியா திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

03.10.2023 அன்று திமுக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல், மாறாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமை மாநில அரசுக்கே வழங்கவேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு நாயக்கர்பட்டி சுரங்கத்திற்கான நில தரவுகளை அனுப்பிய திமுக அரசு, ஏலம் நடத்த எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், "2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் தொடங்கியது முதல் 07.11.2024 அன்று ஏல முடிவு அறிவிக்கும் வரை மாநில அரசிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை" என்று மீண்டும் ஒரு முறை மத்திய அரசு கூறியுள்ளது.

இதற்கு இடைப்பட்ட 10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

இதைத் தான் சட்டமன்றத்திலும், ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து நான் சுட்டிக்காட்டி "10 மாதங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அரசாங்கம் தானே நடத்துறீங்க?" என்று விடியா திமுக அரசை நோக்கி கேட்டுக்கொண்டே இருந்தேன்.

ஆனால், இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல், சட்டமன்றத்தில் ஆ, ஊ என்று அமைச்சர் பதற்றத்தில் பேசியும் , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடைமாற்ற அரசியலும் மட்டுமே செய்து வந்தனர்.

தூங்குபவர்களை எழுப்பலாம்; கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது !

உண்மை மீண்டும் அம்பலப்பட்டு இருக்கிறது. மேலூர் மக்களுக்கு திமுக அரசு இழைத்துள்ள இந்த மாபெரும் துரோகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்