பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
|பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய வரிகள் மூலம் அரசின் வருமானம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும், இந்த கோரிக்கையை நிறைவேற்றாது தி.மு.க. அரசு காலத்தைக் கடத்துவதைப் பார்த்தால், இந்த கோரிக்கை நிறைவேறாதோ என்ற அச்சம் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில், அரசு ஊழியர்கள் குறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்ட நிதி அமைச்சர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஒரு வார்த்தையும் சொல்லாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டதாகவும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தி.மு.க.தான் என்றும் கூறியுள்ளார். நிதி அமைச்சரின் இந்தக் கூற்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
1971 முதல் 1976 வரையிலான காலகட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான எட்டு அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்காத அரசு தி.மு.க. அரசு. எம்.ஜி.ஆர். ஆட்சி அமைத்தபிறகு, மத்திய அரசு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்களுக்கு வழங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க உத்தரவிட்டார். தி.மு.க. செய்த தவறை சீர் செய்தவர் எம்.ஜி.ஆர். என்பதை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
1988-ம் ஆண்டு ஜனாதிபதி ஆட்சி தமிழ்நாட்டில் இருந்த காலக்கட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் 70 ரூபாய் வழங்கப்பட்டது. 1989-ம் ஆண்டு தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வெறும் 100 ரூபாய் குறைந்தபட்ச ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இதில், ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட 70 ரூபாயை கழித்துவிட்டால், வெறும் 30 ரூபாய்தான் குறைந்தபட்ச ஊதிய உயர்வு.
அதே சமயத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் 50 விழுக்காடு அகவிலைப்படி இணைக்கப்பட்டபோது, அதற்கு இணையாக 2006-ம் ஆண்டு மாநில அரசு ஊழியர்களுக்கும் அளித்து ஊதியம் மற்றும் படிகளில் மிகப் பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்பதை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.
இன்றைக்கு இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம், 2009-ம் ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்டபோது 1.6.2009 முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும், 1.6.2009 அன்று மற்றும் அதற்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும் நிர்ணயித்ததுதான்.
2011-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முனைப்புக் காட்டியதோடு, அகவிலைப்படி உயர்வை அவ்வப்போது அறிவித்து அரசு ஊழியர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றார். மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்ய மருத்துவத் தேர்வு வாரியத்தை தோற்றுவித்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இதனால்தான், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தொடர்ந்து ஜெயலலிதா இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட துரோகங்களையும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளையும் அறிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில், நிதி அமைச்சர் அறிக்கை விடுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
நிதி அமைச்சரின் அறிக்கைக்குப் பிறகு, 13-11-2024 அன்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் உள்ளக் குமுறல் அந்தக் கடிதத்தில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்பதற்கேற்ப அ.தி.மு.க. ஆட்சியின் மீது பழிபோடாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.